×

மாவட்டத்தில் 4 மாதத்தில் பதிவான 153 வழக்குகளில் 114 குற்றவாளிகள் கைது

கிருஷ்ணகிரி, மே 5: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், களவு போன பொருட்களில் ₹1.33 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி தங்கதுரை தெரிவித்தார்.

இது குறித்து அவர் நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், குற்ற வரலாற்று பதிவேடு பராமரிக்கப்படும் நபர்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை, மொத்தம் 22 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில் ஒன்று ஆதாய கொலையாகும். குடும்ப பிரச்னையில் 7 கொலைகளும், வாய்த்தகராறு, குடிபோதையில் 6 கொலைகளும், கள்ளத்தொடர்பு பிரச்னையில் 5 கொலைகளும், நில பிரச்னை காரணமாக 3 கொலைகளும் நடந்துள்ளன. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, 25 கொலைகள் நடந்துள்ள நிலையில், இந்த ஆண்டு 15 சதவீதம் குறைவாக பதிவாகி உள்ளது. ஆனாலும், கொலை குற்றங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே போல, கடந்த 4 மாதங்களில் 153 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில் 114 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். களவு போன ₹2 கோடியே 12 லட்சத்து 69 ஆயிரத்து 100 மதிப்பிலான பொருட்களில், ₹1 கோடியே 33 லட்சத்து 6 ஆயிரத்து 425 மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த மாதம் குருபரப்பள்ளி ஏ.டி.எம். மையத்தில் ₹19.27 லட்சம் கொள்ளை வழக்கில், 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடந்தது. அதில் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், கொள்ளையர்கள் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டு, அதில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

அதே போல், தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட ராணிபேட்டையை சேர்ந்த நவீன், போச்சம்பள்ளி திம்மிசெட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 28 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. கஞ்சா விற்றதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ₹5.20 லட்சம் மதிப்பிலான 52 கிலோ கஞ்சா, 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. குட்கா விற்றதாக 138 பேர் கைது செய்யப்பட்டு, 127 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ₹37 லட்சம் மதிப்பிலான 3,800 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 இருசக்கர வாகனங்களும், 12 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சட்டத்திற்கு புறம்பாக அரசு மது, வெளி மாநில மது விற்றதாக, இந்த ஆண்டில் ஏப்ரல் வரை 2,132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2147 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ₹50 லட்சம் மதிப்பிலான 7,524 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த 10 பேர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 526 ரவுடிகள் உள்ளனர். இதில் பல குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இணையவழி குற்றங்களாக, மாவட்டத்தில் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் தற்போது வரை, இணைய வழி குற்றங்களில் ₹8 கோடியே 4 லட்சத்து 50 ஆயிரம் இழந்துள்ளனர். அதில் ₹5.80 கோடி முடக்கப்பட்டுள்ளது. ₹47.65 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 322 பேரின் செல்போன்கள் தொலைந்ததாக புகார் பெறப்பட்டு, 169 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இணையவழி குற்றங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால், இலவச அழைப்பு எண் 1930 தொடர்பு கொள்ளலாம். விடுமுறையில் ஊருக்கு செல்லும் பொதுமக்கள் நகைகள், உடமைகளை பாதுகாப்பாக வைத்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்பவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவும். மேலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்த பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன். நீர் நிலைகள் அருகில் குழந்தைகளை அனுப்புவதை பொதுமக்கள் தவிர்க்கவும்.

மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் குறித்து, காவல் துறைக்கு 24 மணி நேரமும் 100 எண்ணிற்கும், 9498181214 என்ற எண்ணிலும் புகார் செய்யலாம். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து இலவச அழைப்பு எண் 1098 மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 181 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post மாவட்டத்தில் 4 மாதத்தில் பதிவான 153 வழக்குகளில் 114 குற்றவாளிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri district ,SP ,Thangadurai ,Dinakaran ,
× RELATED ஆடு, மாடு, கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தடுப்பு முறைகள்